×

இந்த வார விசேஷங்கள்

காரைக்கால் அம்மையார் 8.4.2023 – சனி

எல்லோருக்கும் தாயும் தந்தையுமாக விளங்குகின்ற இறைவன், “அம்மையே’’ என்று அழைத்ததால் காரைக்கால் நகரில் பிறந்த இந்த சிவனடியாருக்கு காரைக்கால் அம்மையார் என்கின்ற திருநாமம் நிலைத்தது. காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவர். நாயன்மார்களில் மூத்தவர்.

கயிலை மலையின் மீது கால்கள் படக்கூடாது எனக் கருதி கைகளால் நடந்து சென்றவர். அந்தாதி நூல்களில் மிகப் பழமையான நூலாகக் கருதப்படும் `அற்புதத் திருவந்தாதி’ என்னும் நூலை இயற்றியவர். இந்த நூல் சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுதியில் உள்ள ஒரு நூலாகும்.

இது தவிர, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திரு இரட்டை மணிமாலை போன்ற நூல்களைத் தந்து சைவத்தமிழுக்குப் பெரும் தொண்டாற்றியுள்ளார். இவருக்கெனக் காரைக்கால் சிவன் கோயிலில் தனி சந்நதி அமைக்கப்பட்டுள்ளது. அக்கோயில் காரைக்கால் அம்மையார் கோயில் என்று மக்களால் அழைக்கப் பெறுகிறது.

இவருடைய சிறப்புக்கள் சில;

  1. சிவபெருமானால் ‘‘அம்மையே’’ என்று அழைக்கப்பட்டவர்.
  2. இசையில் வல்லவர். இறைவன் நடனமாடும் போது கீழே அமர்ந்து இசைத்தபடி இருப்பார்.
  3. அறுபத்து மூன்று நாயன்மார்களில் அமர்ந்த கோலத்தில் இருப்பவர். மற்ற நாயன்மார்கள் நின்றபடியே பிராகாரத்தில் இருப்பர்.
  4. தமிழில் அந்தாதிமாலை என்ற சிற்றிலக்கிய வகையைத் தொடங்கி வைத்தவர்.
  5. திருவாலங்காட்டில் காரைக்கால் அம்மையார் தங்கியமையால், ஞானசம்பந்தர் அத்தலத்தில் கால்பதிக்க தயங்கினார்.
  6. அம்மையாரின் பாடல்கள் மட்டுமே மூத்த திருப்பதிகம் என்று சைவத்தில் சிறப்பிக்கப்படுகிறது.

காரைக்கால் அம்மையாரின் பெருமையை விளக்கும் மாங்கனித் திருவிழா தனிப்பெரும் விழாவாக ஜூன், ஜூலையில் காரைக்காலில் நடைபெறும். அவருடைய குருபூஜை தினம் பங்குனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில், அதாவது இன்று எல்லா சிவாலயங்களிலும், சிவனடியார்கள் இல்லத்திலும் அனுஷ்டிக்கப்படும். அன்று அபிஷேக ஆராதனைகள் செய்து காரைக்கால் அம்மையார் இயற்றிய பாடல்களை ஓதுவார்கள்.

சமயபுரம் மாரி அம்மன் உற்சவ ஆரம்பம் 9.4.2023 – ஞாயிறு

அம்மன் தலங்களில் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோயில். இங்கே சித்திரைப் பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதிலும் தேரோட்டம், அற்புதமாக இருக்கும். அந்த தேரோட்டத்தை முன்னிட்டு பூச்சொரிதல் விழாவும் தொடங்கும்.

உலகம் நலம் பெற வேண்டும் என்பதற்காக அந்த அம்மனே 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது இந்தக் கோயிலுக்கு உரிய சிறப்பு. வருடம் தோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதக் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை அம்மன் விரதமிருப்பது இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பு.

இந்த 28 நாட்களும் திருக்கோயிலில் அம்மனுக்கு நிவேதனம் கிடையாது. துள்ளு மாவு, நீர்மோர், பானகம், மற்றும் இளநீர் மட்டுமே நிவேதனமாகச் செய்யப்படும். அம்மனுக்கு நடைபெறும் சிறப்பான விழாவான சித்திரைத் திருவிழா
தொடக்கம் இன்று.

சங்கடஹர சதுர்த்தி 9.4.2023 – ஞாயிறு

விநாயகருக்கான மிக எளிய, ஆனால் மிகவும் பலமுள்ள விரதம் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதம். பௌர்ணமிக்கு அடுத்து வரக்கூடிய நான்காவது நாள் சதுர்த்தி நாள். அன்றைக்கு மாலையும் இரவும் சேரும் நேரத்தில் விநாயகருக்கு வழிபாடு செய்யப்படுகிறது. இன்று விசாக நட்சத்திரம். பகல் 2.00 மணிக்குப் பிறகு மிருத்யு நேரம் என்பதால், சுபம் விலக்க வேண்டும்.

எளிதான அருகம்புல்லையும், உலர்ந்த பழங்களையும் வைத்து விநாயகப்பெருமானுக்கு பூஜை செய்வதன் மூலமாக, பாவங்கள் தொலையும். குடும்பத்தில் சுபிட்சம் தலைதூக்கும். சுபத் தடைகள் விலகும். எண்ணிய காரியங்கள் வெற்றியாகும். உடலில் உள்ள நோய்கள் குணமடையும். ஆரோக்கியம் மேம்படும். நிலையான சந்தோஷம் கிடைக்கும்.

அறிவும், ஆயுளும், செல்வமும் அதிகரிக்கும். குறிப்பாக சனிதோஷத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்த விரதம் மிகுந்த நற்பலனைத் தரும். அன்று மாலை பிள்ளையார் கோயிலுக்குச் சென்று, அர்ச்சனை செய்யலாம். மோதகம், சித்ரான்னம், பால், தேன், பழ வகைகள், சுண்டல் முதலியவற்றை விநாயகருக்கு நைவேத்தியம் செய்யலாம்.

வராக ஜெயந்தி 10.4.2023 – திங்கள்

கோல வராகமொன்றாய்; நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய் ‘‘நீலக்கடல் கடைந்தாய்’’, என்று ஆழ்வார்கள் பலராலும் கொண்டாடப்பட்ட அவதாரம் வராக அவதாரம்.வராகப் பெருமாள் அவதரித்து, பூமியை மீட்ட தினம் சித்திரை மாத (சாந்திரமான) தேய்பிறைப் பஞ்சமியாகும். அன்றைய தினம் வராக ஜெயந்தி கடைப் பிடிக்கப்படுகிறது. பூமி யோகம் உண்டாக வராகரை வணங்க வேண்டும். வராகப் பெருமாளை வணங்கினால் நீண்ட புகழ், நிலைத்த செல்வம், நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

திருமால் இந்த உலகத்தைக் காப்பதற்காக எண்ணற்ற அவதாரங்களை எடுத்தார். அதில் மூன்றாவது அவதாரம் வராக அவதாரம். இரண்யாட்சன் என்ற அசுரன் பூமியை, பாயாகச் சுருட்டி கடலுக்குள் ஒளித்து வைத்து விட்டான். இந்த உலகம் இருண்டது. உயிர்கள் கவலையடைந்தன. தேவர்கள் வருந்தினர். இந்த உலகத்தை மீட்டெடுப்பதற்காக மகாவிஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்த பொழுது, மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியைக் காத்தார் என்பது புராண நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘‘எயிற்றிடை மண்கொண்ட எந்தை’’, ‘‘ஏனத்துரு வாகிய ஈசன் எந்தை’’, என்று ஆழ்வார்கள் பாடிய அவதாரம் இது. வராக அவதாரத்திற்கு எண்ணற்ற கோயில்கள் இருக்கின்றன. குறிப்பாக சென்னைக்கு அருகில் இருக்கக்கூடிய திருவிடந்தைக் கோயில் வராக அவதாரத்தில் புகழ்பெற்ற கோயில். சிதம்பரத்துக்கு பக்கத்திலே முஷ்ணத்தில் இருக்கக்கூடிய பெருமாளுக்கு `பூவராகப் பெருமாள்’ என்று பெயர். ஆலயத்தின் பின்புறத்தில் நித்யபுஷ்கரணி தீர்த்தமும், தலவிருட்சமான அரசமரமும் இருக்கின்றன. நித்யபுஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி அரசமரத்தைச் சுற்றிவந்து பெருமாளையும் தாயாரையும் உள்ளம் உருக வழிபட்டால், குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சித்திரைப் பிறப்பு 14.4.2023 – வெள்ளி

இந்த மாத சித்திரைப் பிறப்பு `சோபகிருது’ என்னும் பெயர் உள்ள வருடமாக சுக்கிரனுக்குரிய வெள்ளிக்கிழமையில், பகல் 1.57 மணிக்கு, உபய ராசியான சிம்ம லக்னத்தில் சுக்கிர ஹோரையில் பிறக்கிறது. இந்த வருடத்தின் பலனாக பல நன்மைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

சோபகிருது தன்னில் தொல்லுலகம் எல்லாம் செழிக்கும்.
கோபம் அகன்று குணம் பெருகும் – சோபனங்கள்
உண்டாகும் மாரி ஒழியாமல் பெய்யும் எல்லாம்
உண்டாகும் என்றே உரை

இந்த வருடத்தில் மழை அதிகமாக இருக்கும். அதனால் உலகம் நல்லபடியாக செழித்து இருக்கும். மனிதர்களுக்கு கோபதாபங்கள் அகன்று குணம் பெருகி வாழ்வார்கள். பல சுபகாரியங்கள் உண்டாகும் என்று கூறப்படுகிறது. வருடம் பிறக்கும் பொழுது சூரியனுக்கு உரிய உத்திராட நட்சத்திரம் முடிந்து சந்திரனுக்குரிய திருவோண நட்சத்திரம் துவங்கிவிடுகிறது. பொதுவாக புத்தாண்டு இரண்டு முறையில் கொண்டாடப்படும். தமிழகத்துக்கு வடக்கே சந்திரனின் கதியைக் கொண்டு சாந்திரமான முறையில் கொண்டாடுகிறார்கள். பங்குனி மாதம் அமாவாசை கடந்து பிரதமை பிறந்து விட்டால், புது வருடம் பிறப்பதாகக் கொள்கிறார்கள். நாம் சித்திரை என்பதை அவர்கள் சைத்ர மாதம் என்று சொல்லுவார்கள்.

பூமி, சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. சூரியன், மேஷராசியில் பிரவேசிக்கும் போது தொடங்கும் ஆண்டு, மீனராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது.
வானியல் கணக்குப் படி மேஷ ராசியில், அஸ்வினி விண்மீனின் முதல் பாகையில் நுழையும் தினம் இது.

நாம் மட்டுமல்ல, கேரளா, மணிப்பூர், அசாம், மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் சித்திரையை புத்தாண்டாக ஏற்றுள்ளன. நேபாளம், பர்மா, கம்போடியா, ஸ்ரீலங்கா, தாய்லாந்து உள்ளிட்ட ஏராளமான நாடுகள் சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை அமைத்துள்ளன. பங்குனியின் இறுதிநாட்களில் அல்லது சித்திரை முதல் நாளில்தான் வழக்கமாக வேங்கைமரம் பூக்கும். மலைபடுகடாம் ‘‘தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை’’ என்றும், பழமொழி நானூறு ‘‘கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால்’’ என்றும் பாடுவதால் இளவேனில் துவக்கமான சித்திரையே அக்காலத்தில் தலைநாளாகக் கருதப்பட்டது.

சித்திரை மாதத்தின் முதல்நாளில், அனேகமாக, சைவ வைணவ வேற்றுமை இல்லாது, எல்லா கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகளும் ஆராதனைகளும் நடக்கும். எல்லாக் கோயில்களிலும் அன்று “பஞ்சாங்க படனம்” என்று நடத்துவார்கள். அன்று பஞ்சாங்கம் படிப்பது என்பது மிகவும் சிறப்பு. பஞ்சாங்கம் என்பது அன்றையதிதி, நட்சத்திரம், நாள் (வாரம்), யோகம், கரணம் என்ற ஐந்து அங்கங்களைப் படிப்பது.

இதில் திதியைச் சொல்வதன் மூலமாக மகாலட்சுமியின் அருளும், நட்சத்திரத்தைச் சொல்வதன் மூலமாக பாவங்களிலிருந்து விடுதலையும், நாளைச் சொல்வதினால் ஆயுள் விருத்தியும், யோகத்தைச் சொல்வதினாலே நோயிலிருந்து விடுதலையும், கரணத்தைச் சொல்வதால் செய்கின்ற செயலில் வெற்றியும் கிடைக்கும்.

முதல் நாளே வீட்டைத் தூய்மைப்படுத்துங்கள். மாவிலைத் தோரணங்கள் கட்டுங்கள். அது தீய சக்திகளை விரட்டும். முந்தைய நாள் இரவே பூஜை அறையில் மங்கலப் பொருள்களான வெற்றிலை பாக்கு, புஷ்பம், முக்கனிகள், தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், அரிசி, பருப்பு, வெல்லம், கண்ணாடி முதலிய பொருள்களைப் பரப்பி வையுங்கள்.

அடுத்த நாள் காலை எழுந்து குளித்துவிட்டு முதன்முதலாக பூஜை அறையில் இந்த மங்கலப் பொருள்களை பார்ப்பதன் மூலமாக, அந்த வருடம் முழுக்க நமக்கு மங்கலங்களாக இருக்கும். இதனை சித்திரை விஷூ என்பார்கள். உங்கள் இஷ்டதெய்வத்தை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். அன்று வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளுங்கள். மாதப்பிறப்பை ஒட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும். அன்றைய தினம் வேப்பம்பூப் பச்சடி, மாங்காய்ப் பச்சடி, பருப்பு வடை, பாயசம், நீர்மோர் போன்றவற்றை கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

புத்தாண்டு நாளில், குலதெய்வ வழிபாடு முக்கியம். சர்க்கரைப் பொங்கலோ பாயசமோ நைவேத்தியமாகப் படையலிட்டு வேண்டிக் கொள்ளுங்கள். நேர்மறை சிந்தனையோடு தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட, குடும்பம் சீரும் சிறப்புமாக இருக்கும். வீட்டின் தரித்திரம் விலகும். சகல செல்வங்களும் குடிகொள்ளும்.

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Karaikal Ammayar ,Sani ,Amy ,Karaikal City ,
× RELATED இந்த வார விசேஷங்கள்